Tags

, , , , , , , , , , , , , ,

வசந்தம் வெளியீட்டகத்தின் அருணனின் புத்தகங்கள் BookConnect-ன் புத்தகத் தொகுப்பில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அவை flipkart மூலமாகக் கிடைக்க BookConnect ஏற்பாடு செய்திருக்கிறது. விரைவில் இன்னும் சில தளங்களிலும் கிடைக்கப் போகிறது.

‘அருணன்’ என்னும் புனைப்பெயரில் எழுதி வரும் திரு இரா கதிரேசன், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கத்தில் வணிகவியல் துறையில் 38 ஆண்டுகள் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். படைப்பிலக்கியத்திலும் இலக்கிய விமர்சனத் துறையிலும், சமூக/தத்துவ ஆய்விலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 1975-ல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் துவங்கியதில் இருந்து அதில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட அருணன் பல ஆண்டுகள் அதன் செயலாளராக இருந்தார். இப்போது அதன் கௌரவத் தலைவராக இருக்கிறார். செம்மலர் ஆசிரியர் குழுவிலும் இருக்கிறார்.

‘காலம் தோறும் பிராமணீயம்’ என்னும் நூல் ஒரு இந்திய சமூக வரலாற்றுப் பெருநூலாகும். பிராமணீயம் ஒரு சமுதாய கட்டமைப்பு என்கிற முறையில் அதன் இயங்குநிலையை வேதகாலம் முதல் தற்காலம் வரை இது ஆராய்கிறது. வேதகாலம் முதல் சோழர் காலம் வரை, டில்லி சுல்தான்கள் காலம், முகலாயர்கள் காலம், கிழக்கிந்தியக் கம்பெனி காலம், பிரிட்டனின் நேரடி ஆட்சிக் காலம், தற்காலம் என இது வரை இந்நூல் ஏழு பாகங்களாக வெளி வந்திருக்கிறது. இது நாள் வரை ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள பல மதிப்பீடுகள் அங்கே மறுபரிசீலனைக்கு ஆளாகியுள்ளன.

இவருடைய நூல்களில் முக்கியமானது எனக் கருதத்தக்கது இரு பாகங்களாக எழுதப்பட்ட ‘தமிழர்களின் தத்துவ மரபு’ எனும் பெருநூலாகும். சங்க இலக்கியம் முதல் நவீன மதகுருமார்கள் வரை தமிழன் நடந்து வந்த தத்துவ மரபை இது விரிவாக எடுத்துரைக்கிறது. முதல் பாகம் ஆதி மரபு முதல் மீண்டும் வந்த வேதமரபு வரை பேசியது என்றால், இரண்டாம் பாகம் சைவ சித்தாந்தம் முதல் பெரியாரியம்- மார்க்சியம் வரை எடுத்துரைக்கிறது.

இவர் எழுதிய 60-க்கும் மேற்பட்ட இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் ‘பொங்குமாங்கடல்’-கால் நூற்றாண்டு கால கலை இலக்கியக் கட்டுரைகள்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது. திருக்குறள், நாலடியார் போன்ற ஒளி விளக்குகள் உதித்த களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என எப்படி சொல்லலாம் எனக் கேள்வி எழுப்பியது முதல் கட்டுரையான களப்பிரர் காலம் இருண்ட காலமா? எனும் கட்டுரை. அகிலன், கல்கி, ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி போன்றோரின் படைப்புகள் பற்றிய மதிப்பீடும் இவரின் தனித்த, சுயேச்சையான இலக்கிய சிந்தனைக்கு உதாரணமாகும்.

‘தமிழ் இலக்கிய (வழி) வரலாறு’ எனும் இவரின் பெரும் படைப்பு சங்க இலக்கியம் முதல் மனோன்மணியம் வரையிலான தமிழ்க் கவிதைகளை ஒரு புதிய நோக்கில் முன்வைக்கிறது. இலக்கியங்களை வரலாற்றுப் பின்புலத்திலும், வரலாற்றை இலக்கியங்களின் வழியாகவும் காணுகிற புது முயற்சியாகும். இது தமிழ் இலக்கிய வரலாறு. இதுவே இலக்கியம் வழி தமிழக வரலாறும் கூட.

அருணனின் பிற புத்தகங்கள்:

புரு-வம்சா மகாபாரத மறுவாசிப்பு
சரயு
கண்ணதாசன்
மானுட விசாரணை
கோட்சேயின் குருமார்கள்
பெரியாரின் பெண்ணியம்
மார்க்ஸிய அழகியல்
இலண்டன் டயரி
முப்பெருங்கவிஞர்கள்
தமிழ் இலக்கிய (வழி) வரலாறு
மானுடம் தந்த கம்பன்
கொலைக் களங்களின் வாக்குமூலம்
நிழல் தரா மரம்
சங்கர மடத்தின் உண்மை வரலாறு
எம்.ஜி.ஆர். நடிகர் முதல்வரான வரலாறு
லெனின் வாழ்வும் சிந்தனையும்
ஹிந்து மதவெறி முகமும் முகமூடிகளும்
காரல் மார்க்ஸ் வாழ்வும் சிந்தனையும்
வாழும் கலை – ஓசோவை முன்வைத்து விவாதம்
வ.உ.சி கடைசிக் காலத்தில் தடம் மாறினாரா?

Advertisements